கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் 96 சதவீதம் நிறைவு: ஈரோடு ஆட்சியர் தகவல் :

ஈரோடு: கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் 96 சதவீதம் நிறைவடைந்து தற்போது சோதனை ஓட்டம் நடந்து வருவதாக ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்தார்.

ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலுள்ள பெருந்துறை மற்றும் 7 பேரூராட்சிகள், 547 வழியோர ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீர் தேவைக்காக ரூ.227 கோடி மதிப்பீட்டில் கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதனை ஆய்வு செய்த ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி கூறியதாவது;

கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக, தனி நபருக்கு நாளொன்றுக்கு ஊரகப் பகுதிகளில் 55 லிட்டர் வீதமும், பேரூராட்சிப் பகுதிகளில் 135 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்கப்பட உள்ளது. இதற்காக, கொடிவேரி கதவணைக்கு மேலே பவானி ஆற்றின் கரையில் நீரேற்றும் நிலையத்துடன் கூடிய கிணறு அமைக்கப்படவுள்ளது. இங்கிருந்து எடுக்கப்படும் நீர் குழாய்கள் மூலம் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நபார்டு வங்கி நிதி ஆதாரத்துடன், 96 சதவீதம் பணிகள் நிறைவடைந்து தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது, என்றார்.

இதனைத் தொடர்ந்து சிறுவலூர், திங்களூர் பகுதியில் நடந்த கரோனா தடுப்பூசி முகாமினை ஆட்சியர் பார்வையிட்டார். திங்களூர் சி.எஸ்.ஐ தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவிற்காக மசாலா முட்டையுடன் தயாரிக்கப்பட்ட கலவைசாதத்தை சாப்பிட்டு பார்த்து உணவின் சுவை மற்றும் தரத்தினை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் சி.வீரராஜன், செயற்பொறியாளர் கே.ஜி.சுதாமகேஷ், நிர்வாக பொறியாளர் சி.வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்