திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று பகல் முழுக்க இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது. பள்ளிகளுக்கு மதியத்துக்குமேல் திடீரென்று விடுப்பு அளிக்கப்பட்டதால் கொட்டும் மழையில் மாணவ, மாணவியர் கடும் அவதியுற்றனர். திருநெல்வேலி மாநகரம் திக்குமுக்காடியது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 7 மணியிலிருந்து சாரல் மழை தொடங்கியது. காலை 10 மணிக்குமேல் இந்த மழை வலுத்து, இடி மின்னலுடன் கனமழையாக பெய்தது. திருநெல்வேலி மாநகரிலும், மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் கனமழை இரவிலும் நீடித்தது. தாழ்வான பகுதிகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழையால் இருள் சூழ்ந்ததை அடுத்து வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சாலைகளில் ஊர்ந்து சென்றன.
கனமழை எச்சரிக்கையை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் மதியம் முதல் பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப் படுவதாக மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு நண்பகல் 12 மணியளவில் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு அந்தந்த பள்ளி களுக்கு தெரிவிக்கப்பட்டு மாணவ, மாணவியரை பள்ளிகளிலிருந்து அனுப்பும் பணிகளில் ஆசிரியர்கள் இறங்கினர்.
திடீரென்று விடுமுறை அறிவிப்பு வந்த நிலையில் மாணவ, மாணவியரை வாகனங்களில் அழைத்து செல்வதற்காக பெற்றோரும், வாகன ஓட்டுநர்களும் கொட்டும் மழையில் பள்ளிகளில் திரண்டனர். இதனால் பாளையங்கோட்டையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மாவட்டம் முழுக்க இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலையோர வியாபாரம் முடங்கியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை காரணமாக மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை எச்சரித்துள்ளது. இதனால் நேற்று மாவட்டத்திலுள்ள 10 மீனவ கிராமங்களிலும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வில்லை. முனைஞ்சிப்பட்டியில் மின்னல் தாக்கியதில் 15 ஆடுகள் உயிரிழந்தன.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 90 மி.மீ. மழை கொட்டியிருந்தது. பிறபகுதிகளிலும், அணைப்பகுதிகளிலும் பதிவான மழையளவு (மி.மீட்டரில்):
அம்பாசமுத்திரம்- 43, சேரன்மகாதேவி- 53, மணிமுத்தாறு- 32.40, நாங்குநேரி- 43, பாபநாசம்- 34, ராதாபுரம்- 40, திருநெல்வேலி- 64.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago