வரத்து குறைவால் ஈரோட்டில் உச்சத்தில் காய்கறிகள் விலை : தக்காளி கிலோ ரூ.130-க்கு விற்பனை

By செய்திப்பிரிவு

ஈரோடு காய்கறிச்சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால், விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. தக்காளி கிலோ ரூ.130 வரை விற்பனையானது.

ஈரோடு நேதாஜி காய்கறி சந்தை, வ.உ.சி பூங்கா மைதானத்தில் செயல்பட்டு வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் ஈரோடு காய்கறிச்சந்தைக்கு வருகின்றன. தொடர் மழையால், காய்கறிகளின் வரத்து வெகுவாகக் குறைந்ததாலும், திருமணம் உள்ளிட்ட விஷேசங்களால் தேவை அதிகரிப்பாலும் காய்கறிகளின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. அதேபோல் தக்காளியின் விலை உச்சத்தைத் தொட்டு கிலோ ரூ.130-க்கு விற்பனையாகிறது.

இதுகுறித்து காய்கறிச்சந்தை வியாபாரிகள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, ஆசனூர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி, கர்நாடகாவின் சில பகுதிகளில் இருந்து நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 டன் தக்காளி ஈரோடு சந்தைக்கு விற்பனைக்கு வரும். தற்போது தொடர்மழை காரணமாக இரண்டு முதல் மூன்று டன் தக்காளி மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதனால், தக்காளி விலை கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விலை வைத்து விற்கப்படுகிறது. உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கு விற்கப்படுகிறது.

காய்கறிகளைப் பொறுத்தவரை கிலோவுக்கு ரூ.10 முதல் 30 வரை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.120, முருங்கைக்காய் ரூ.130, அவரைக்காய் ரூ.110, முள்ளங்கி ரூ.100, புடலங்காய் ரூ.80, பாகற்காய் ரூ.80, கேரட் ரூ.55, பீன்ஸ் ரூ.60, பீட்ரூட் ரூ.40 என்ற விலையில் விற்பனையானது மழைக்காலம் முடியும் வரை தக்காளி, காய்கறிகளின் வரத்து சீராக வாய்ப்பில்லை, என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்