சேலம் ரயில்வே கோட்ட வணிகத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்தவர்கள் உள்ளிட்ட விதிகளை மீறியவர்களிடம் நடப்பாண்டில் அக்டோபர் வரை ரூ.4.94 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் ரயில் பயணங்களின்போது விதிமீறல்களில் ஈடுபடுவோரிடம் அபராதம் வசூலித்து, நடவடிக்கை எடுக்க கோட்ட மேலாளர் கவுதம் னிவாஸ் மேற்பார்வையில், முதுநிலை வணிகக் கோட்ட மேலாளர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் 34 குழுக்கள் அமைக்கப்பட்டு ரயில்கள், ரயில் நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிக்கெட் எடுக்காதவர்களிடமிருந்து ரூ.4.76 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட 24 முக்கிய ரயில் நிலையங்கள், சேலம் கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள், சேலம் வழியாக செல்லும் ரயில்கள் ஆகியவற்றில் சேலம் ரயில்வே கோட்ட வணிகப்பிரிவு அலுவலர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவோரிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர்.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த 83,995 பேர்களிடமிருந்து ரூ.4 கோடியே 76 லட்சத்து 74 ஆயிரத்து 402 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாமல் ரயில்களில் பயணித்தவர்கள், ரயில்வே வளாகங்களில் நடமாடிய 2 ஆயிரத்து 702 பேர்களிடமிருந்து ரூ.13 லட்சத்து 51 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago