சுகாதாரமான முறையில் தயாராகும் சத்துணவு - ஈரோடு அரசுப் பள்ளி சமையல்கூடத்துக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று :

By செய்திப்பிரிவு

ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி சமையல் கூடத்துக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று கிடைத்துள்ளது.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் சத்துணவுக் கூடத்தில் நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட மாணவியர் உணவருந்தி வருகின்றனர். சிறப்பாக பராமரிக்கப்பட்டதால், இப்பள்ளியின் சமையல் கூடத்துக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று கிடைத்துள்ளது

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை மாலா மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது:

நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட மாணவியர் உணவருந்தும் சமையல்கூடத்தை, சுகாதாரமான முறையில் பராமரிக்க முடிவு எடுத்து அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கட்டிடம் செப்பனிடப்பட்டு, வண்ணம் அடிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் வகையில், பெற்றோர் சமையல் பாத்திரங்கள் மற்றும் மண் பாத்திரங்களை வழங்கினர்.

மாணவியருக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதோடு, சுகாதாரம் காக்கும் வகையில், காய்கறிகளை மஞ்சள் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் எனவும், சமையலர்கள் நகங்களை வெட்டியிருக்க வேண்டும், முடி உணவில் விழாமல் இருக்க தலையில் தொப்பி அணிந்து சமைக்க வேண்டும் என்பதுள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதனைக் கண்காணிக்க ஆசிரியர் குழு அமைக்கப்பட்டதோடு, கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டது. பள்ளியில் இயற்கை முறையில் காய்கறிகள் விளைவிக்கப்பட்டு, வாரத்தில் ஒருநாள் அவை சமையலுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

இந்த வசதிகள் குறித்து தெரிவித்து சமையல் கூடத்துக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் கோரி விண்ணப்பித்தோம்.

இதன் அடிப்படையில், நான்கு முறை ஆய்வு செய்த தரச்சான்று அதிகாரிகள் கடந்த மாதம் ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றனர்.

இப்பள்ளியில் சமையல் கூடம் மட்டுமின்றி பள்ளியில் ஒவ்வொரு கட்டிடங்களுக்கும் தமிழகத்தின் வீர மங்கைகள் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாணவியரின் மன அழுத்தத்தை போக்க வகுப்பறை முன்பு தூரி ஆடும் வசதி, டிஜிட்டல் நூலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை இப்பள்ளி நிர்வாகத்தினர் செய்துள்ளது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்