வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு, அண்ணன் படுகாயம் : புலியூரில் உறவினர்கள் சாலை மறியல்� 

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் புலியூர் வெங்கடாபுரத் தைச் சேர்ந்தவர் ஓ.எஸ்.ஆறுமுகம்(39), தனியார் நிறுவன காவலாளி. இவரது மனைவி மலர்க்கொடி. இவர்களின் மகன்கள் ஆகாஷ்(14), சுனில்(12). அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆகாஷ் 10-ம் வகுப்பு, சுனில் 6-ம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் ஆறுமுகம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. நள்ளிரவில் திடீரென ஏதோ சப்தம் கேட்டு, ஆறுமுகமும் மலர்க்கொடியும் வீட்டுக்கு வெளியே வந்துபார்த்தபோது, வீட்டின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதி மண் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதில், வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த சுனில் இடிபாடுகளுக்குள் சிக்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். ஆகாஷ் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து வந்த கரூர் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பசுபதிபாளையம் போலீஸார் அங்கு சென்று, படுகாயமடைந்த ஆகாஷை மீட்டு சிகிச்சைக்காகவும், உயிரிழந்த சுனிலின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காகவும் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வீட்டை சீரமைத்துத் தர வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் புலியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் வட்டாட்சியர் மோகன்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்