பாலியல் வன்கொடுமைக்கு எதிராக - இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்�  :

By செய்திப்பிரிவு

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்றக் கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள பெரியார் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட துணைச் செயலாளர் சூரியா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மோகன், கோரிக்கையை விளக்கிப் பேசினார்.

பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும். போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்படும் நபர்கள் பிணையில் வெளியே வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் கல்வி- பாலின சமத்துவம் குறித்த பாடங்களை புத்தகங்களில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் அழகுராஜா, மணிகண்டன், தருண், முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, புதுக்கோட்டை மன்னர் அரசு கல்லூரி யில் இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர் வினோத் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எஸ்.ஜனார்த்தனன் பேசினார்.

இதேபோன்று, கறம்பக்குடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவி லக்சாயினி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் சந்தோஷ் பேசினார். மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கரூரில் மறியல்...

கரூர் அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி பாலியல் தொல்லை காரணமாக இறப்பதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு, கடந்த 19-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இவரது தற்கொலைக்கு காரணமானவர்களை விரைந்து கைது செய்ய வலியறுத்தி, இந்திய மாணவர் சங்கம் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்பினர் மாணவி படித்த தனியார் பள்ளியின் பேருந்தை கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே நேற்று மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து, 78 மாணவ, மாணவிகளை கரூர் நகர போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, கரூர் அரசு கலைக் கல்லூரியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று வகுப்புகளைப் புறக்கணித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். இதை யறிந்த ஆட்சியர் த.பிரபுசங்கர், எஸ்.பி ப.சுந்தரவடிவேல் ஆகியோர் அங்கு சென்று, வழியிலேயே மாணவர்களை சந்தித்து மனுவை பெற்றுக்கொண்டதையடுத்து, மாணவர்கள் கலைந்துசென்றனர்.

இதற்கிடையே, திருப்புதல் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் பொருட்டு இளநிலை, முதுநிலை வகுப்புகளுக்கு நேற்று முதல் நவ.27-ம் தேதி வரை 4 நாட்கள் விடுமுறை விடப்படுவதாகவும், நவ.29-ம் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் அரசு கலைக் கல்லூரி முதல்வர் அறிவித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்