சாலைகளில் அவிழ்த்து விடப்படும் மாடுகள் ஏலம் : மதுரை மாநகராட்சி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

‘இந்து தமிழ்’ செய்தி எதிரொலியாக சாலைகளில் அவிழ்த்து விடப்படும் மாடுகள் ஏலம் விடப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி பகுதி களில் அண்மைக்காலமாக சாலைகளில் மாடுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளன. வாகனங்கள் மீது மாடுகள் மோதுவதால் ஓட்டுநர்கள் படுகாயம் அடைகின் றனர். மாநகராட்சி அதிகாரிகள், சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடித்தால் அதன் உரிமையாளர்கள் அரசியல் பின்னணியுடன் வந்து மாடுகளை மீட்டுச் செல்கின்றனர். அதனால், மதுரை சாலைகளில் மாடுகள் அட்டகாசத்தை கட்டுப் படுத்த முடியவில்லை. இது குறித்து `இந்து தமிழ்' நாளிதழில் கடந்த வாரம் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாநகராட்சி தற் போது நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் கூறியிருப்பதாவது:

மதுரை நகர் சாலைகளில் சுற்றித் திரிந்த சுமார் 85 மாடுகள் கடந்த 10 நாட்களில் பிடிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.1,20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தொடர்ந்து திரியும் மாடுகளைப் பிடிக்க இந்த வார இறுதிக்குள் கூடுதல் குழுக்கள் அமைக்கப்படும். மதுரை நகரில் மாடுகள் வளர்ப்பவர்கள் தங்கள் சொந்த இடத்தில் வைத்து மாடுகளைப் பராமரிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகளில் மாடுகளை திரிய விடுபவர்களின் மாடுகள் கைப்பற்றப்படும். பிறகு மூன்று நாட்களில் உரிமம் எடுக்காத பட்சத்தில் மாடுகள் ஏலம் விடப் படும். இதுபோன்று தொடர்ந்து மாடுகளை சாலையில் திரியவிடும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது அபராதம் மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்