கடந்த ஆட்சியில் கட்டப்பட்டு உடைந்த தளவானூர் தடுப்பணை, தற்போதைய வெள்ளத்தின் காரணமாக தகர்க்கப்பட்டு இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்கிறது. இடிபாடுகளை அகற்ற ஆன செலவினம் என்னவென்று இதுவரையில் குறிப்பிடப்படவில்லை.
விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டிதீர்த்ததால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல கிராமங்களில் தரைப்பாலங்கள் அடித்து செல்லப்பட்டு கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.
இந்நிலையில், விழுப்புரம் அருகே திருப்பாச்சனூர் மலட்டாற்றில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் சென்றதால் கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பழமை வாய்ந்த இந்த பாலம் வெள்ளத்திலும் அடித்துச் செல்லப்பட்டது. பாலம் சேதமடைந்துள்ளதால் வெள்ளம் வடிந்த பிறகும் போக்குவரத்து சீராகவில்லை.
தற்போது நெடுஞ்சாலைத் துறையினர் தற்காலிக சீரமைப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பணியை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் மோகன், எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து, போக்குவரத்து செல்ல நடவடிக்கை எடுக்க அமைச்சர் அறிவுறுத்தினார்.
தற்போது திருப்பாச்சனூர் மலட்டாற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளையும் விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, தளவானூர் பகுதியில் வெள்ளம் புகுந்த அரசுப் பள்ளிக் கட்டிடம், குடியிருப்புகள், விவசாய நிலங்களையும் ஆய்வு செய்து மீட்புபணிகளை துரிதப்படுத்திட அமைச்சர் அறிவுறுத்தினார்.
அடித்து செல்லப்பட்ட ஜேசிபி மீட்கும் முயற்சி
விழுப்புரம் அருகே தளவானூரில் கடந்த ஆட்சியில் ரூ.25.35 கோடி மதிப்பில் கட்டிய தடுப்பணை கடந்த 2020 அக்டோபரில் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் தடுப்பனை உடைந்தது.தற்போதைய வெள்ளப் பெருக்கால், மேலும் அதில் உடைப்பு ஏற்பட்டு, ஊருக்குள் வெள்ளம் புகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஆட்சியர் மோகன் உத்தரவுபடி இந்த தடுப்பணை கடந்த வாரத்தில் வெடிவைத்து தகர்க்கப்பட்டன.
தடுப்பணை உடைந்த சிமெண்ட் கட்டைகளை முழுவதுமாக அகற்றுவதற்கு சென்னையிலிருந்து மிதவை ஜேசிபி இயந்திரம் கொண்டுவரப்பட்டு ஆற்றில் நிலை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் வேகம் குறைந்த பிறகு இப்பணிகளை மேற்கொள்ளலாம் என்று, அங்கேயே நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மேலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்த நிலையில் இந்த மிதவை ஜேசிபி இயந்திரம் அடித்துச்செல்லப்பட்டது. ஊழியர் கள் யாரும் இல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை. அடித்துச் செல்லப்பட்ட ஜேசிபி இயந்திரத்தை தேடிவந்தனர்.
இந்நிலையில், தற்போது தண்ணீரின் அளவு குறைந்ததால் தளவானூரிலிருந்து சுமார் அரைகிலோ மீட்டர் தூரத்தில் ஜேசிபி இயந்திரம் நேற்று கண்டறியப்பட்டது. தற்போது, அதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தளவானூரில் வெடிவைத்து தகர்க்கப்பட்டு இடிபாடுகளை அகற்ற எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினரிடம் பேசியும், முழுமையான விவரம் பெற இயலவில்லை. கட்டி முடிக்க ரூ. 25.35 கோடி செலவானது. தகர்க்கப்பட்டு, இடிபாடுகளை அகற்ற எவ்வளவு செலவானது என்று தெரியவில்லை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago