சேலம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் மொத்தம் உள்ள 430 நீர்நிலைகளில் முக்கிய ஏரிகள் உட்பட 103 நீர்நிலைகள் நிரம்பின. 42 நீர்நிலைகள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பியுள்ளன. 126 நீர்நிலைகள் வறண்ட நிலையில் காணப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு தென்மேற்குப் பருவமழை சராசரிக்கும் கூடுதலாக பெய்ததில், மாவட்டத்தில் உள்ள பல நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்திருந்தது. தற்போது, வட கிழக்குப் பருவமழை நீடிக்கும் நிலையில், மாவட்டத்தின் பல இடங்களில் பெய்த தொடர் மழையால் வறண்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
குறிப்பாக மாவட்டத்தின் முக்கிய ஆறுகளான திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதி, சுவேத நதி, சரபங்கா உள்ளிட்டவைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த ஆறுகளைச் சார்ந்துள்ள பாசன ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன.
எனினும், மாவட்டத்தில் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட மொத்தமுள்ள 430 நீர்நிலைகளில், ஏரிகள் உள்ளிட்ட 126 நீர்நிலைகள் வறண்ட நிலையில் உள்ளன.
இதுதொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி அமைப்பு அதிகாரிகள் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 107 ஏரிகள், கிராம ஊராட்சிகளில் 276 நீர்நிலைகள், பேரூராட்சிகளில் 44 நீர்நிலைகள், சேலம் மாநகராட்சியில் 3 ஏரிகள் என மொத்தம் 430 நீர்நிலைகள் உள்ளன. இவற்றில் கடந்த 21-ம் தேதி வரை ஏரிகள் உள்ளிட்ட 103 நீர்நிலைகள் 100 சதவீதம் நிரம்பின. 42 நீர்நிலைகள் 75 சதவீதம் நிரம்பியுள்ளன. 23 நீர்நிலைகள் 50 சதவீதம் நிரம்பியுள்ளன.
136 நீர்நிலைகள் 50 சதவீதத்துக்கும் குறைவாக நிரம்பியுள்ளன. 126 நீர்நிலைகள் நீர்வரத்தின்றி வறண்ட நிலையில் உள்ளன.
குறிப்பாக, சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள பள்ளப்பட்டி ஏரி, குமரகிரி ஏரி உள்ளிட்ட 3 ஏரிகள் இன்னும் முழுமையாக நிரம்பவில்லை. வடகிழக்குப் பருவமழைக் காலம் நீடிப்பதாலும், பெய்துள்ள தொடர் மழையினால் நீரோடைகளில் நீர்வரத்து தொடர்வதாலும் இந்த ஏரிகள் விரைவில் நிரம்பிவிடும். வறண்டுள்ள ஏரிகளும் பருவமழைக் காலத்துக்குள் நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago