மழைநீரில் மூழ்கியும், படைப்புழு தாக்குதலாலும் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், தரமற்ற விதைநெல் விற்பனை செய்த உரக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
திருச்சி மாவட்டம் 94 கரியமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் 20-க்கும் அதிகமானோர் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுடன் திருச்சி ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று மனு அளிக்க வந்திருந்தனர்.
அவர்கள் கூறும்போது, “கரியமாணிக்கம் கிராமத்தில் பருத்தி, மக்காச்சோள வயல்களை மழைநீர் சூழ்ந்ததால் படைப்புழு தாக்குதல் அதிகரித்து 500-க்கும் அதிகமான ஏக்கர் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல, 50 ஏக்கர் பருத்தி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, அரசு நிவாரணம் வழங்க ேண்டும்” என்றனர்.
இதேபோல, தூர் பிடிக்காத நெற்பயிர்களுடன் மனு அளிக்க வந்த நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறும் போது, “நவலூர் குட்டப்பட்டில் உள்ள 3 தனியார் உரக் கடைகளில் வாங்கி விதைத்த விதை நெல் தரமற்றதாக உள்ளது. விதைத்த அனைத்து விதைகளும் முளைப்புத்திறனற்றும், தூர் பிடிக்காமலும் உள்ளன. மேலும், அந்த தனியார் உரக் கடையினர் வெளிச்சந்தையைக் காட்டிலும் அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்கின்றனர்.
இதுகுறித்து வேளாண் அலுவலர்களுக்கு புகார் அளித்தும் அந்த தனியார் உரக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, தரமற்ற விதை நெல் விற்பனை செய்த தனியார் உரக் கடைகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், விவசாயிகளுக்கு நேரிட்டுள்ள இழப்பை ஈடுசெய்யும் வகையில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்’’ என்றனர்.
இதேபோல, பெரம்பலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.செல்லதுரை தலைமையில், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago