கரூரில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அவரது உறவினர்களை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கரூர் எம்.பி ஜோதிமணி வலியுறுத்தி உள்ளார்.
கரூர் அருகே பிளஸ் 2 மாணவி ஒருவர் கடந்த 19-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர், பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதிவைத்திருந்தார்.
இந்நிலையில், மாணவியின் தாயை நேற்று முன்தினம் சந்தித்து ஆறுதல் கூறிய கரூர் எம்.பி செ.ஜோதிமணி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
கரூரில் பாலியல் வன்கொடுமையால் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், புகார் கொடுக்கச் சென்ற மாணவியின் தாயாரை காவல் ஆய்வாளர் கண்ணதாசன் தகாத வார்த்தைகளால் பேசி, மாணவியின் உறவினர்களை தாக்கியுள்ளார்.
எனவே, காவல் ஆய்வாளர் கண்ணதாசன் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். அவர் மீது முறையாக வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவர் மீது எடுக்கும் நடவடிக்கை மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும், பெண்கள் துணிந்து புகார் அளிக்கக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். கல்லூரி, பள்ளிகளில் விசாகா கமிட்டி அமைத்து, மாவட்டம் அல்லது வட்டார அளவில் கவுன்சிலரை நியமிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வெளியே சொல்ல வேண்டும். கரூர் மக்களவைத் தொகுதியில் பாதிக்கப்பட்ட பெண்கள் என்னையும், என் அலுவலகத்தையும் தொடர்புகொண்டால் துணையாக இருப்போம் என்றார்.
இதற்கிடையே, மாணவி தற்கொலை தொடர்பாக காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மாநிலத் தலைவர் வி.மாரியப்பன் தலைமையில் நேற்று ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, பின்னர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago