முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் சட்ட விரோத மணல் குவாரி : சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

By செய்திப்பிரிவு

தாமிரபரணி ஆற்றில் பல்வேறு இடங்களில் சட்ட விரோத மணல் குவாரி நடைபெறுவது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி முறப்பநாடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ் ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

முறப்பநாடு காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் தாமிரபரணி ஆற்றில் இரவு, பகலாக சட்ட விரோதமாக மணல் கடத்தல் நடைபெறுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தாமிரபரணி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் கடத்துவோர், மணல் கடத்தலில் ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், பி.புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அணு ஆராய்ச்சித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், இப்பகுதியில் உள்ள மணலில் 10 சதவீதம் கார்னைட், இலுமினைட், மோனசைட் போன்ற அரிய கனிமங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து அந்த கனிமங்களை அரசுக்கு உதவும்படி விதிகள் அடிப்படையில் கையாள வேண்டும். வழக்கறிஞர் ஆணையர் புகைப்படங்கள், வீடியோ பதிவுகளை தாக்கல் செய்துள்ளார். இதிலிருந்து தாமிரபரணி ஆற்றில் பல இடங்களில் சட்ட விரோதமாக மணல் எடுக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இதனால் சட்ட விரோத மணல் கடத்தல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி விசாரிக்க வேண்டும்.

இப்பகுதியில் சட்ட விரோத மாக அள்ளப்பட்ட மணல் சட்ட விரோதமாக விற்பனை செய்யப் பட்டுள்ளதா? என்பதையும் சிபிசிஐடி விசாரிக்க வேண்டும். மனுதாரருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்