கோவை, திருப்பூரில் நடைபெறும் விழாக்களில் - முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் : பாதுகாப்பு பணியில் 7 ஆயிரம் போலீஸார்; ட்ரோன்கள் பறக்கத் தடை

By செய்திப்பிரிவு

கோவை, திருப்பூரில் நடைபெறும் விழாக்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். 7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று (நவ.22) கோவை வருகிறார். காலை 11.15 மணிக்கு கோவை விமானநிலைய வளாகத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

அதனைத்தொடர்ந்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் வ.உ.சி. மைதானத்துக்கு பகல் 12 மணிக்கு முதல்வர் செல்கிறார். அங்கு பல்வேறு துறைகள் சார்பில் நிறைவேற்றப்பட்ட புதிய திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார். புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் பகல் 1.20 மணிக்கு கார் மூலம் திருப்பூர் புறப்பட்டு செல்கிறார். அங்கு சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். விழா முடிந்ததும், மாலை 6 மணிக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் மற்றும் தொழில் துறையினரை சந்தித்து கலந்துரையாடுகிறார். 6.30 மணிக்கு திருப்பூரில் இருந்து புறப்படும் முதல்வர், இரவு 7.30 மணிக்கு கோவை வந்து அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

முதலீட்டாளர்கள் மாநாடு

நாளை காலை 10.30 மணிக்கு கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் கலந்து கொள்கிறார். இதில் வெளிநாடு மற்றும் உள்நாட்டை சேர்ந்த முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெறவுள்ளது. பகல் 1 மணிக்கு சிறப்பு விமானம் மூலமாக முதல்வர் சென்னை திரும்புகிறார்.

பலத்த பாதுகாப்பு

முதல்வர் வருகையை முன்னிட்டு கோவையில் 4 ஆயிரம் போலீஸாரும், திருப்பூரில் 3 ஆயிரம் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்காக ஈரோடு, சேலம், நீலகிரி உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

முதல்வரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோவை, திருப்பூரில் இன்றும், நாளையும் ‘ட்ரோன்’கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் வாகனம் செல்லும் சாலையின் இருபுறமும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். விழா நடைபெறும் வ.உ.சி. மைதான மேடையை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வ.உ.சி. மைதானத்தில் மாநகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளித்தல், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட தொற்றுத் தடுப்பு பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்