பல ஆண்டுகளுக்குப் பின்னர் வசிஷ்ட நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து,இதன் நீர் ஆதார ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், நதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகும் முக்கிய நதிகளில் ஒன்று வசிஷ்ட நதி. இந்த நதியை நீர் ஆதாரமாக கொண்டு பெத்தநாயக்கன் பாளையம், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி வட்டங்களில் உள்ள ஏராளமான கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் வன வளம் குறைந்த காரணத்தால், வசிஷ்ட நதியில் பல ஆண்டுகளாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. மேலும், நதியையொட்டியுள்ள கிராம மற்றும் நகரப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலக்கும் குட்டையாக மாறிப்போனது.
அழிவு நிலையில் இருந்த வசிஷ்ட நதியில் தற்போது பெய்த தொடர் மழையை தொடர்ந்து நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. இதன் மூலம் இதன் நீர் ஆதாரம் மூலம் பயன்பெறும் ஏரிகள் அனைத்தும் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இந்நிலையில், நதியை பாதுகாக்க அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் சிலர் கூறியதாவது:
வசிஷ்ட நதியில் மணல் கொள்ளை மற்றும் சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் ஆக்கிரமித்துள்ளது. மேலும், குட்டைபோல தேங்கும் தண்ணீரில் ஆகாயத்தாமரை செடிகளும் அதிகரித்துள்ளன. இதனால், நதியின் நீரோட்டம் தடைபடும் நிலையுள்ளது.
நதியின் கரைகள், நதியின் உட்பகுதி ஆகியவற்றில் வீடுகள், கோயில்கள், இறைச்சிக் கடைகள் என பல வகை ஆக்கிரமிப்புகள் உள்ளன. தற்போது பெய்த கன மழையால் நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago