நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் :

By செய்திப்பிரிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நவம்பர் 21-ம் தேதி முதல் விருப்ப மனுக்களை, அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் அளிக்கலாம் என, திமுக தலைமை அறிவித்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக சார்பில் விருப்ப மனுக்கள் விநியோகம் நேற்று தொடங்கியது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருப்ப மனுக்கள் விநியோகத்தை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தொடங்கி வைத்தார். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளரான தமிழக மீன்வளத்துறை, மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் விருப்ப மனுக்கள் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல் நாளிலேயே ஏராளமான கட்சி நிர்வாகிகள் விருப்ப மனுக்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மேலும், சிலர் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து மாவட்ட பொறுப்பாளர்களிடம் அளித்தனர்.

மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.10 ஆயிரம், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.5,000, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.2,500 கட்டணமாக செலுத்த வேண்டும். பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளுக்கு பாதி கட்டணம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்