மார்க்சிஸ்ட் மாவட்ட மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் : புதிய மாவட்டச் செயலாளராக கே.பி.ஆறுமுகம் தேர்வு

By செய்திப்பிரிவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10-வது மாவட்ட மாநாடு தூத்துக்குடியில் 2 நாட்கள் நடைபெற்றது. 2-ம் நாளான நேற்றைய நிகழ்ச்சிகளுக்கு தலைமைக் குழுவைச் சேர்ந்த கே.பி.ஆறுமுகம், பி.பூமயில், பி.ஜாய்சன் ஆகியோர் தலைமை வகித்தனர். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.பேச்சிமுத்து வாசித்தார். மாநகர் செயலாளர் தா.ராஜா வரவேற்றார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் சமர்ப்பித்தார்.

மாநாட்டில் 35 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய மாவட்டச் செயலாளராக கே.பி.ஆறுமுகம் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக கே.எஸ்.அர்ச்சுணன், ஆர்.ரசல், ரவீந்திரன், பேச்சிமுத்து, அப்பாதுரை, ராஜா, சண்முகராஜ், சீனிவாசன், புவிராஜ், பூமயில் தேர்வு செய்யப்பட்டனர். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி நிறைவுரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் எம்.எஸ்.முத்து நன்றி கூறினார்.

கூட்டத்தில், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். விபத்தின் வீரியம் குறித்து அறிய உதவும் ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும். தூத்துக்குடியிலிருந்து விளாத்திகுளம் அருப்புக்கோட்டை வழியாக மதுரை வரையிலான ரயில்வே திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கருங்குளம் ஒன்றியம் செய்துங்கநல்லூர், தெய்வச்செயல்புரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைத்து தர வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் வசித்து வரும் காட்டுநாயக்கன் சமுதாய மக்களுக்கு பழங்குடி மக்களுக்கான ஜாதி சான்று வழங்க வேண்டும். ஓட்டப்பிடாரம் பகுதியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும். தூத்துக்குடி நகர் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்