பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படும் : கோவை மாநகர காவல்துறை புதிய ஆணையர் தகவல்

கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த தீபக் எம்.தாமோர், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநராக பணியிடம் மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து சென்னை பெருநகர காவல்துறையில் கூடுதல் ஆணையராக (போக்குவரத்து) பணியாற்றி வந்த பிரதீப் குமார் கோவை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பிரதீப் குமார் கூறும்போது, ‘‘தமிழகத்தில் உள்ள முக்கிய மாநகரங்களில் கோவை முதன்மையானது. மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படும். பெண்கள், குழந்தைகள், முதியோருக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கைக்கு எடுத்துச் செல்லப்படும்.

சாலை விபத்துகளை குறைக்கஉரிய நடவடிக்கை எடுக்கப்படும். சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும், விபத்துகளை குறைப்பது தொடர்பாகவும் வல்லுநர்களுடன் கலந்தாய்வு நடத்தி தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொருளாதார குற்றங்கள், வேலை வாங்கித் தருவதாக நடக்கும் பண மோசடிகள் போன்ற மோசடி சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, இதில் தொடர்புடையவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்