சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி ஊருக்குள் புகுந்த தண்ணீர் : சிரமத்துக்குள்ளான மக்கள்

By செய்திப்பிரிவு

சிவதாபுரம் அருகேயுள்ள சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி வெளியேறிய தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இதனால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

சேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவதாபுரம் அருகில் 70 ஏக்கர் நிலப்பரப்பளவில் சேலத்தாம்பட்டி ஏரி உள்ளது. மழைக் காலங்களில் சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுவது வடிக்கையாக நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த தொடர் மழையால், சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறி சிவதாபுரம் ஊருக்குள் புகுந்தது. மேலும், வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்தது. தாழ்வான பகுதியில் தண்ணீர் குட்டைபோல தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமத்துக்குள்ளாகினர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது:

சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி அடிக்கடி ஊருக்குள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. தற்போது, பெய்த மழையால் ஏரி நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்து விட்டது.

ஏரி நீர் செல்ல வடிகால் அமைத்து தண்ணீரை திருமணி முத்தாற்றில் கலந்து விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏரி நிரம்பும் போது மக்கள் பாதிப்படையும் நிலை உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: தம்மம்பட்டி 35, ஆத்தூர் 32.2, பெத்தநாயக்கன்பாளையம் 16, மேட்டூர் 11.4, கரியகோவில் 10, கொங்கவல்லி 9.6, வீரகனூர் 5, ஓமலூர் 2.1, ஏற்காடு 2, சங்ககிரி-1.2 மிமீ மழை பதிவானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்