ஆட்டையாம்பட்டி பகுதியில் - வீடுபுகுந்து திருட்டில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது :

ஆட்டையாம்பட்டி பகுதியில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

ஆட்டையாம்பட்டி அடுத்த எஸ். பாலம் பெத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் நல்லம்மாள் (76). இவரது வீட்டில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி இரவு பீரோவில் இருந்த 7 பவுன் தங்கச் செயின் மற்றும் தலா ஒரு பவுன் இரு மோதிரங்கள் திருடுபோனது.

இதேபோல, கடந்த செப்டம்பரில் ரத்தினவேல்கவுண்டர் காட்டைச் சேர்ந்த கோகிலா என்பவரின் வீட்டில் பூட்டை உடைத்து 900 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் திருடுபோனது.

இதுதொடர்பாக டிஎஸ்பி தையல்நாயகி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை திருச்செங்கோடு பிரதான சாலையில் ஆட்டையாம்பட்டி போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் போலீஸார் விசாரித்தனர்.

விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் அர்ஜுனன் (35) மற்றும் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (22) என்பதும் அவர்கள் ஆட்டையாம்பட்டி பகுதியில் திருட்டில் ஈடுபட்டதும் தெரிந்தது.

மேலும், விசாரணையில், அர்ஜூனன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும், ஆந்திராவில் அவர் மீது 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், மாதேஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பென்னாகரத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகி 15 மாதம் சிறை தண்டனை அனுபவித்தவர் எனவும் தெரிந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகை மற்றும் இருசக்கர வாகனத்தை மீட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE