தென் பெண்ணையாறு, மலட் டாறு, கெடிலம் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் தாழ்வான இடங்களில் வசிக்கும் 2,300 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரம் வீடுகளைச் சுற்றி இரண்டாம் நாளாக வெள்ள நீர் தேங்கி நிற்கிறது.
தொடர் மழையால் சாத்தனூர் அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. மேலும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பெய்த கனமழையால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் மூலம் தென்பெண்ணையாற்றில் நேற்று முன்தினம் சுமார் 1 லட்சம் கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. நேற்று நீர்வரத்து 66 ஆயிரம் கன அடியாக குறைந்ததால் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெள்ள நீர் சற்றே வடியத் தெடங்கியுள்ளது.
இருப்பினும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் புதிய ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுங்கச்சாவடி சாலை, மேல்பட்டாம்பாக்கம் சாலை, அழகியநத்தம் சாலை தண்ணீரில் மூழ்கியுள்ளது. கடலூர் மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதியில் உள்ள குண்டுசாலை, பெரிய கங்கணாங்குப்பம், செம்மண்டலம், குண்டு உப்பலவாடி, கண்டக்காடு, தாழங்குடா, நாணல்மேடு, சுனாமி நகர், எஸ்.என்.சாவடி உள்ளிட்ட 50 இடங்களில் சுமார் 5 ஆயிரம் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள பல புறநகர் பகுதிகள் தீவு போல காட்சியளிக்கின்றன. குடியிருப்புப் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இருந்த சுமார் 2 ஆயிரத்து 391 ஆயிரம் பேரை படகுகள் மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அவர்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பண்ருட்டி பகுதியில் கண்டரக்கோட்டை, கோழிபாக்கம், பகண்டை, புலவனூர், மேல்குமாரங்கலம், மேல்பட்டம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் குடியிருப்புப் பகுதியில் புகுந்தது. அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 21 முகாம்களில் நேற்று இரவு வரையில் 5 ஆயிரம் பேர் இருந்தனர்.
இதற்கிடையே கீழணை யில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 81 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் கரையோர கிராமங்களான பெராம்பட்டு, ஜெயக்கொண்டப்பட்டினம், மடத்தான் தோப்பு உள்ளிட்ட ஊர்களில் கொள்ளிடம் கரை யோரம் பயிரிடப்பட்டிந்த வாழை, கத்திரி வயல்களில் தண்ணீர் புகுந்துள்ளது.
பண்ருட்டி பகுதியில் கெடிலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருவதிகை, எம்ஜிஆர் நகர், இலுப்பைத்தோப்பு, பகண்டை பாபுகுளம் ஆகிய பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்து நிற்கிறது.
வாழை உள்ளிட்ட பயிர்களும் சேதமடைந்தன. இப்பகுதியில்நேற்று முன்தினம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்றும் தென்பெண்ணையாற்றில் சுமார் 66 ஆயிரம் கன அடியும், கெடிலம் ஆற்றில் 44 ஆயிரம் கனஅடி தண்ணீரும் சென்று கொண்டிருந்ததால் குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்த வெள்ள நீர் வடிய தாமதம் ஏற்பட்டுள்ளது.
நெல்லிக்குப்பம் விஸ்வநாதன் நகர், சரவணபுரம், வாழப்பட்டு, பகண்டை, புலவனூர், கோழிபாக்கம், ஆல்பேட்டை திடீர்குப்பம், திருவந்திபுரம் கே.என்.பேட்டை என பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், எம்எல்ஏக்கள் தி.வேல்முருகன், கோ.ஐயப்பன், ஆட்சியர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் இரு கட்டங்களாகச் சென்று பார்வையிட்டு உரிய நிவாரண உதவிகளை வழங்கினர்.
வெள்ளநீர் வடிய பொதுப்பணித் துறையினர் மேற்கொண்ட நடவடிக் கைகள் குறித்து கேட்டறிந்தனர்.
தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்ற தேவை யான கூடுதல் உபகரணங்களை கையாளுமாறு கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், "கடலூர் மாவட்டம் 5 ஆறுகளின் வடிகால் பகுதியாக அமைந்திருக்கிறது. சிதம்பரம், பண்ருட்டி, புவனகிரி,குறிஞ்சிப்பாடி, காட்டு மன்னார்கோவில் பகுதிகள் அதிகமாக பாதிக்க வாய்ப்பு உள்ளது. தென்பெண்ணையாற்றின் கொள்ளளவு 1 லட்சம் கன அடியை தாண்டிநீர் வரத்து அதிகமாகி கங்கணாங்குப்பம், நாணமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் தென்பெண்ணையாற்றின் மேற்கு பக்கம் உள்ள கரை வழியாக தண்ணீர் புகுந்து குடியிருப்புகளில் தேங்கியுள்ளது.
ஆண்டுதோறும் பெய்து வரும் கனமழையால் ஆற்றின் கரை உடைந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கெல்லாம் ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
முதல்வரும் இந்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தென்பெண்ணையாறு பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கட்டமைப்பினை பலப்படுத்தி நல்ல தரமாக அமைத்து வெள்ள தடுப்பினை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago