வாக்காளர் பட்டியலில் இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் பெயர் சேர்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தத்துக்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமை சேலம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநருமான ஷோபனா ஆய்வு செய்தார். தொடர்ந்து, சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு தலைமை வகித்து ஷோபனா பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 21 ஆயிரத்து 900 மனுக்களும், நீக்கலுக்கு 7 ஆயிரத்து 92 மனுக்கள், திருத்தத்துக்கு 4 ஆயிரத்து 696 மனுக்கள், ஒரே தொகுதிக்குள் இடமாற்றம் செய்ய 3 ஆயிரத்து 98 மனுக்கள் என மொத்தம் 36 ஆயிரத்து 786 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
வாக்காளர்கள், www.nvsp.invwizajs_ykhf,“Voter helpline” என்ற இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். வாக்காளர்கள் தங்கள் பதிவினை உறுதி செய்ய 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் வரும் 30-ம் தேதி வரை பெறப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், கோட்டாட்சியர்கள் விஷ்ணுவர்த்தினி (சேலம்), சரண்யா (ஆத்தூர்), வேடியப்பன் (சங்ககிரி), ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சரவணன், வட்டாட்சியர் (தேர்தல்) மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago