நாமக்கல்லில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகள் மற்றும் 19 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன்படி நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள், ராசிபுரம் நகராட்சியில் 27, திருச்செங்கோடு நகராட்சியில் 33, பள்ளிபாளையம் நகராட்சியில் 21, குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. மேலும், 19 பேரூராட்சிகளில் மொத்தம் 447 வார்டுகள் உள்ளன.
உள்ளாட்சித் தேர்தலையொட்டி 689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களை அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதன்படி நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார்.
அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கான பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணிக்கை விவரங்களை கணினியில் பதிவேற்றுவதற்கான அறை உள்ளிட்ட இடவசதி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இதுபோல் ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய இடங்களிலும் ஆட்சியர் ஆய்வு செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர், வட்டாட்சியர்கள் கண்ணன், கார்த்திகேயன், நகராட்சி ஆணையர்கள் பொன்னம்பலம், சண்முகம், ஸ்டாலின் பாபு, ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago