புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி? : விவசாய சங்கங்கள் இன்று ஆலோசனை

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணியை நடத்துவது குறித்து விவசாய சங்கங்கள் இன்று ஆலோசித்து முடிவெடுக்கவுள்ளன.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அறிவித்தார். இதனை விவசாய சங்கங்கள் வரவேற்றுள்ள போதிலும், வேளாண் சட்டங்களை வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் முறைப்படி வாபஸ் பெறும் வரை, தங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விவசாயிகளின் போராட் டத்தை ஒருங்கிணைத்து வரும் சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு சார்பில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய விவசாய சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அதன் பின்னர், சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பின் தலைவர் தர்ஷன் பால், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த சட்டங்களை முறைப்படி வாபஸ் பெற்ற பின்னரே, எங்கள் போராட்டத்தை நிறைவு செய்வோம்.

அதேபோல, வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை, குளிர்காலக் கூட்டத்தொ டரின் போது தினசரி நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என அண்மையில் அறிவித்திருந்தோம். அந்த அறிவிப்பை இப்போது வரை நாங்கள் திரும்பப் பெறவில்லை. இந்த டிராக்டர் பேரணியை நடத்துவது குறித்து நாளை (இன்று) ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE