ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழைக் கால முகாம்களில் தங்கியவர்களுக்கு அமைச்சர் ஆர்.காந்தி நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே, கலவை மற்றும் அரக்கோணம் பகுதியில் உள்ள 3 முகாம்களில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 162 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், ஆற்காடு மற்றும் வாலாஜா பகுதிகளில் உள்ள 5 சிறப்பு முகாம்களில் 315 குடும்பங்களைச் சேர்ந்த 1,135 பேர் என மொத்தம் 1,297 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் சென்று ஆய்வு செய்ததுடன் அரிசி, வேட்டி, சேலை, போர்வைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
மேல்விஷாரம் எம்.டி.தொடக்கப் பள்ளியில் உள்ள முகாம், ராணிப் பேட்டையில் தனியார் திருமண மண்டபம், அல்லிகுளம் அரசு தொடக்கப் பள்ளியில் தங்க வைக்கப் பட்டுள்ள குடும்பத்தினர்களுக்கு அமைச்சர் நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர், வன்னிவேடு தேசிய நெடுஞ்சாலையோரம் அகத் தீஸ்வரர் கோயிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த இடத்தை அமைச்சர் பார்வையிட்டார். அப்போது, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago