சாயக்கட்டணம் இன்றுமுதல் 25 சதவீதம் உயர்த்த முடிவு : ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் தகவல்

By செய்திப்பிரிவு

திருப்பூரில் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொது சுத்திகரிப்பு நிலையங்களின் மேலாண்மை இயக்குநர்கள், தலைவர்கள், தனியார் சுத்திகரிப்பு ஆலை உரிமையாளர்கள் என பலரும் பங்கேற்றனர். கூட்டத்தில் மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தால்,தற்போதுள்ள சாயக்கட்டணங்களுக்கு தொழில் செய்ய முடியாது என பலரும் வலியுறுத்தினர்.

பின்னலாடை உற்பத்திக்கு தேவையான நூல் உட்பட அனைத்துமூலப்பொருட்களின் விலையும், 50 சதவீதத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பிருந்த விலையை ஒப்பிடும்போது, சாயப்பொருட்களின் விலை40 சதவீதமும், விறகின் விலை 50சதவீதமும், நிலக்கரி 150 சதவீதமும், காஸ்டிக்சோடா 195 சதவீதமும், ஹைட்ரஜன் பெராக்ஸைடு51 சதவீதமும், அசிட்டிக் 200 சதவீதமும் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எனவே மூலப்பொருட்களின் விலையேற்றத்துக்கு ஏற்ற வகையில், சாயக் கட்டணத்தை அதிகப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். அதனடிப்படையில், கடந்த மாதம் அறிவித்த 15 சதவீதம் விலை உயர்வை 25 சதவீதமாக மாற்ற ஏகமனதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி. காந்திராஜன் மற்றும் பொதுச்செயலாளர் எஸ்.முருகசாமி ஆகியோர் கூறும்போது ‘‘ஏற்கெனவே 2 மாதத்துக்கு முன் நடைமுறையில் இருந்த சாயக்கட்டணம் 15 சதவீதம் விலையிலிருந்து, தற்போது 10 சதவீதம் உயர்த்தி, 25 சதவீதம் விலை உயர்வை இன்று (நவ.20)முதல் உடனடியாக அமல்படுத்துமாறு, அனைத்து சாய ஆலைகளுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது,’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்