நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள தலைகுந்தா, பிங்கர்போஸ்ட், பாலாடா உட்பட அனைத்து கிராமப் பகுதிகளிலும், கோத்தகிரி, குந்தா, கூடலூர், குன்னூர் உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த 17-ம் தேதி கனமழை கொட்டி தீர்த்தது. மழையால் பாதிக்கப்பட்ட காந்தல், பிங்கர்போஸ்ட் விசி காலனி, எல்லநள்ளி மற்றும் குன்னூர் பகுதிகளை நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
உதகை வி.சி.காலனி பகுதியில் அங்கன்வாடி மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு வேட்டி, சேலை, கம்பளி, அரிசி போன்றவற்றை வழங்கினர். அதன்பின்னர், மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, செய்தியாளர்களிடம் கூறும்போது ‘‘நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக வீடுகள், கடைகளை இழந்தவர்களுக்கு முழு நிவாரணம் கிடைக்கும் வகையில், மாவட்ட ஆட்சியருடன் ஆலோசித்து, நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2009-ம் ஆண்டு கனமழையால் ஏற்பட்ட சேதத்தை நினைவில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப்பில் தேர்தல் நடக்கவுள்ளது. இதை கருத்தில் கொண்டே மூன்று வேளாண் சட்டங்களையும் பிரதமர் வாபஸ் பெற்றுள்ளார்,’’ என்றார்.
ஆய்வின்போது உதகை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.கணேஷ்,மாவட்ட ஆட்சியர் (பொ) கீர்த்தி பிரியதர்ஷினி, உதகை வட்டாட்சியர் தினேஷ், நகராட்சி ஆணையர் ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago