வேளாண் திருத்தச் சட்டங்கள் திரும்பப் பெறுவது தொடர்பான, மத்திய அரசின் முடிவை வரவேற்று விவசாயிகள், அரசியல் கட்சியினர் நேற்று இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கோவை காந்திபுரத்தில், மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் சார்பில், ஏராளமானோர்பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் விவசாயி களுக்கு வாழ்த்து தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்வுக்கு கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை வகித்தார்.
அதேபோல், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கோவை மாவட்டப் பிரிவின் சார்பில், அதன்தலைவர் சு.பழனிசாமி தலைமையில் ஏராளமான விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். அவ்வழியாக வந்த வாகன ஓட்டுநர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி, தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பின்னர், தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுவது விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. அதேபோல், விவசாயிகள், சட்ட வல்லுநர்கள் உள்ளிட்டோரை கொண்டு குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது,’’ என்றார். மேட்டுப்பாளையம் சிஐடியுபொதுத் தொழிலாளர் சங்கத்தினர்சார்பில், மேட்டுப்பாளையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதேபோல திருப்பூர் பல்லடம்சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க அலுவலகம் முன்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமையிலான விவசாய சங்கத் தலைவர்கள் வெடிவெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். பல்லடம் அருகே காளிநாதம்பாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகளும், விவசாயிகளும் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.ஊத்துக்குளியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில்கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.சின்னசாமி ஆகியோர் தலைமையில் பலர் பங்கேற்றனர். கட்சி சார்பற்றதமிழக விவசாயிகள் சங்கத்தின் செயல்தலைவர் என்.எஸ்.பி. வெற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘மூன்று வேளாண் சட்டங்கள்ரத்து செய்வதாக மத்திய அரசுஅறிவித்துள்ளது.
இது விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. இந்தபோராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் காங்கயம்பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி விவசாயிகள் கொண்டாடினர். அனைத்து விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்டப் பொறுப்பாளர் தங்கவேல், மதிமுக ஒன்றியக் குழு பொறுப்பாளர் மணி, சிஐடியு அமைப்பின் மாவட்டக்குழு உறுப்பினர் கே.திருவேங்கடசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago