சேலம் அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழை நீரை வெளியேற்றிய அதிமுக ஊராட்சித் தலைவியின் கணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி எம்.என்.பட்டி கீரியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (53). சுற்றுலாப் பேருந்து ஓட்டுநர். இவரது மனைவி செல்வி. அதிமுகாவைச் சேர்ந்த செல்வி எம்.என்.பட்டி ஊராட்சித் தலைவியாக உள்ளார். அண்ணாதுரை மனைவிக்கு உதவியாக உடனிருந்து ஊராட்சிப் பணிகளை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சேலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இது போல, எம்.என்.பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கியது.
தண்ணீரை மின் மோட்டாரைக் கொண்டு வெளியேற்றும் பணியில் அண்ணாதுரையும், நைனா கவுண்டனூரைச் சேர்ந்த மோகன் என்பவரும் ஈடுபட்டிருந்தனர். மின் மோட்டார் திடீரென நின்ற நிலையில், அதனை மீண்டும் இயக்க அண்ணாதுரை முயன்றார்.
அப்போது, மின் மோட்டாரில் இருந்து அண்ணாதுரை மீது மின்சாரம் பாய்ந்து, தூக்கி வீசப் பட்டு, பலத்த காயம் அடைந்தார். அவரை ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்து வர்கள் அண்ணாதுரை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொளசம்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago