கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி - மலைக்கோட்டை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் :

By செய்திப்பிரிவு

கார்த்திகை தீபத் திருநாளையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சியில் நேற்று மகா தீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, திருச்சி மலைக்கோட்டை மட்டுவார் குழலம்மை உடனாய தாயுமானசுவாமி, மாணிக்க விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு நேற்று சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, 273 அடி உயரத்தில் உள்ள உச்சிப்பிள்ளையார் சன்னதி அருகே 50 அடி உயரத்தில் பெரிய செப்புக் கொப்பரையில் 300 மீட்டர் அளவுள்ள பருத்தி துணியை திரியாக கொண்டு, 900 லிட்டர் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் ஆகியவற்றை ஊற்றி, ஏற்கெனவே தயாராக வைக்கப்பட்டிருந்த திரியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் 3 நாட்களுக்கு தொடர்ந்து எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மலைக்கோட்டையில் மகா தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து வீடுகளிலும் மக்கள் தீபங்களை ஏற்றி கார்த்திகை திருநாளைக் கொண்டாடினர்.

இதேபோல, ரங்கம் ரங்கநாதர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி கோயிலின் கார்த்திகை கோபுரம் முன்பு அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை நேற்று மாலை கொளுத்தப்பட்டது. முன்னதாக நம்பெருமாள் இரவு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சொக்கப்பனை கண்டருளினார்.

இதேபோல, பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையில், மகா தீபத்திருவிழாவையொட்டி நேற்று 2 ஆயிரம் மீட்டர் நீள திரி, 1,008 லிட்டர் நெய், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய் மற்றும் 108 கிலோ கற்பூரம் கொண்டு, 5 அடி உயர செப்புக் கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகா சித்தர்கள் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்