வெள்ள நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் : அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

`தமிழகத்தில் வெள்ள நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்” என்று, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

திருநெல்வேலி வண்ணார் பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து, ஆட்சியர் அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்து அவர்அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்ததுபோன்று, மாநில அரசும் வரி குறைப்பு செய்யவேண்டும். தமிழகத்தில் வெள்ள நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் அளிக்கவேண்டும். பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரூ.2,500 வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது. இதை கருத்தில் கொண்டு தீபாவளி பரிசாக மத்திய அரசு பெட்ரோலுக்கு ரூ.10-ம், டீசலுக்கு ரூ.5-ம் வரிகுறைப்பு செய்தது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் இந்த வரிக்குறைப்பு செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் அவ்வாறு வரி குறைப்பு செய்யப்படவில்லை. உடனடியாக வரிக்குறைப்பு செய்ய வேண்டும்.

8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளதை வரவேற்கிறோம். அதேநேரம் 8 வழி பசுமை சாலை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது வரவேற்க கூடியது என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE