திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி, கோடகநல்லூர், மானூர் பகுதிகளில் வாழை நார்களில் இருந்து பயனுள்ள பொருட்களை உற்பத்தி செய்யும் பணியில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர், சுத்தமல்லி, கோடகநல்லூர் பகுதிகளில் மகளிர் திட்டம் மூலம் வாழை நார்களில் இருந்து பயனுள்ள பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் பணிகளை, மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
களக்காடு மற்றும் சேரன்மகாதேவி வட்டார பகுதிகளில் அதிக அளவு வாழை பயிரிடுவதை கருத்தில் கொண்டும், வாழை அறுவடைக்குப் பின்னர் வீணாகும் வாழை நார் கழிவுகளை உபயோகமாக பயன்படுத்தும் விதமாகவும், வாழை விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கவும், வாழை நார்களில் இருந்து பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தூத்துக்குடியைச் சார்ந்த ரமேஷ் ப்ளவர்ஸ் ஏற்றுமதி நிறுவனத்தின் மூலம் இதற்கான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு, வேலை வாய்ப்பற்ற மற்றும் பீடி தொழிலில் ஈடுபட்டு வரும் மகளிருக்கு மாற்றுத் தொழில் ஏற்படுத்தும் விதமாக, ஏற்றுமதி செய்யத்தக்க பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
வாழை நாரிலிருந்து பயனுள்ள பொருட்கள் உற்பத்தி குறித்து 70 மகளிருக்கு பயிற்சி அளிக்கப்படுவதையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திரபாண்டியன், மகளிர் திட்ட உதவி அலுவலர் வி.ராமர், மானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago