நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.7 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம் : மருத்துவக் கல்லூரி மருத்துவ அலுவலர் தகவல்

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.7 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது, என மருத்துவக் கல்லூரி நிலைய மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் ரூ.338.75 கோடி மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் இந்தாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. எனினும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இச்சூழலில் மாணவர் சேர்க்கை முடிந்து கல்லூரி செயல்படத் தொடங்கினால் கல்லூரிக்குத் தேவையான குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் பி.கண்ணப்பன் கூறியதாவது:

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாமக்கல் நகராட்சி மூலம் நாள்தோறும் 1 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இது தற்காலிக நடவடிக்கை தான்.

அதேவேளையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கென நாள்தோறும் 14 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க ரூ. 7 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் ஜேடர்பாளையம் - நாமக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் நாமக்கல் அடுத்த முசிறி கிராமத்தில் இருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தனியாக குடிநீர் குழாய் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்யப்படும். நாள்தோறும் 14 லட்சம் லிட்டர் வீதம் தண்ணீர் வழங்கப்பட உள்ளது, என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், குடிநீர் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் பணி தொடங்கப்படும். மொத்தம் 14 கி.மீ., தூரத்திற்கு குழாய் பதிக்கப்பட உள்ளது. ஆயிரம் லிட்டருக்கு ரூ.30 வீதம் கட்டணம் வசூலிக்கப்படும், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE