சேலம் மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்படுகிறது : சிறப்பு முகாமில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் பெருமிதம்

பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் சேலம் மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்படுகிறது என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று மக்கள் குறைதீர் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:

தலைவாசல் மற்றும் ஆத்தூரில் நடந்த சிறப்பு முகாம்களில் மக்களிடம் பெறப்பட்ட பல மனுக்கள் மீது ஆட்சியரும், அதிகாரிகளும் உடனடியாக மேடையிலேயே தீர்வு காண நடவடிக்கை எடுத்தனர். முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சுய உதவிக் குழுக்கான கடனுதவிகள், வீட்டுமனைப் பட்டா கோருதல் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் தீர்க்க மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் 26-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், சுமார் 100 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. வேலைவாய்ப்பு தேடும் பட்டதாரிகள், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் உள்ளிட்ட அனைவரும் முகாமில் பங்கேற்று பயனடைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், ஆட்சியர் கார்மேகம், எம்பி பார்த்திபன், எம்எல்ஏ-க்கள் ராஜேந்திரன், அருள், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, முன்னாள் எம்எல்ஏ சிவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து காடையாம்பட்டி வட்டம் நடுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமில், மொத்தம் ரூ.13.03 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து, மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி வட்டங்களில் சிறப்பு முகாம் நடந்தது.

இம்முகாமில், மேட்டூர் உதவி ஆட்சியர் (பொ) வேடியப்பன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) செல்வம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார், தனி துணை ஆட்சியர் சத்திய பாலகங்காதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இலங்கை தமிழர் முகாம்

ஓமலூர் அடுத்த பவளத்தானூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடந்த நிகழ்ச்சியில், இலங்கை தமிழர்கள் 2 ஆயிரத்து 24 பேருக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்