திருச்சி அருகே இனாம்குளத்தூரில் - 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரக்கல் கண்டெடுப்பு :

By செய்திப்பிரிவு

திருச்சி அருகே இனாம்குளத்தூரில் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்த கல்லை கண்டறிந்த தொல்லியல் ஆய்வாளர் பாலா பாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் குளக்கரையில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலுக்கு இடப்புறத்தில் 3.5 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட பலகைக் கல் ஒன்று அண்மையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த பலகைக் கல், வில்லியாரின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்ட வீரக்கல் என்று தெரியவந்தது. வாரி முடித்த கொண்டையும், காதணியும், கழுத்தணியும், முன்கரங்களில் கடகவளையும், பின் கரங்கள் மற்றும் கால்களில் காப்பும், இடுப்பில் அரைப்பட்டிகையும், குறுவாளும் அணிந்து இடக்கரத்தில் வில்லையும், வலக்கரத்தில் அம்பையும் நாணையும் இணைத்துப் பிடித்து இழுத்து எதிரியை அம்பு எய்திக் தாக்கும் படியாக இடக்காலை முன்பக்கமாகவும், வலது காலை பின்பக்கமாகவும் நீட்டி வீரக் கோலம் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

இந்த உருவத்தை வில்லுக்காரன் என உள்ளூர் மக்கள் குறிப்பிடுகின்றனர். இங்கு வாழ்ந்த ஒரு பிரிவினர் தற்போது இனாம்புலியூருக்கு இடம் பெயர்ந்து விட்டதாகவும், அவர்கள் மாதந்தோறும் பவுர்ணமியன்று இந்த கல்லை வழிபாடு செய்து வந்ததும் தெரிய வருகிறது. இந்த வீரக்கல் கி.பி.8-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்