இலங்கை ரோந்து கப்பல் மோதி உயிரிழந்த - கோட்டைப்பட்டினம் மீனவரின் உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆர்.ராஜ்கிரண்(30), எஸ்.சுகந்தன்(30), ஏ.சேவியர்(32) ஆகியோர் அக்.19-ம் தேதி கடலில் மீன்பிடித்தபோது எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து படகு மூலம் இடித்தனர்.

அதில், மீனவர்களின் படகு கடலில் மூழ்கி ராஜ்கிரண் உயிரிழந்தார். சுகந்தன், சேவி யர் ஆகியோரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து பின்னர் விடுவித்தனர்.

இதையடுத்து, அக்.23-ம் தேதி இலங்கையில் இருந்து ராஜ்கிரணின் உடல் கடல் வழியாக கொண்டுவரப்பட்டு கோட்டைப்பட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ராஜ்கிரணின் உடலில் காயம் இருந்ததால், இலங்கை கடற்படை அவரை கொலை செய்திருக்கலாம் என்பதால், அவரது உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிடக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா மனுத் தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் 16-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, மணமேல்குடி வட்டாட்சியர் ராஜா முன்னிலையில் நேற்று பொக்லைன் மூலம் தோண்டி எடுக்கப்பட்ட சடலத்தை தடயவியல் துறை மருத்துவர்கள் தமிழ்மணி, சரவணன் ஆகியோர் பிரேதப் பரிசோதனை செய்தனர்.

பின்னர், கூடுதல் சோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இதற்கான அறிக்கை வரும் 24-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்