திருச்சி மாநகரில் சாலைகளில் கால்நடைகளைத் திரியவிட்டால், அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்சி மாநகர சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும், பொது சுகாதாரத்துக்கும் கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை தங்கள் வளாகத்துக்குள்ளேயே கட்டி வைத்து, சுகாதார முறைப்படி வளர்க்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலும் தெருக்களிலோ, சாலைகளிலோ கால்நடைகளை சுற்றித்திரியவிட்டால், அவை மாநகராட்சி நிர்வாகத்தால் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
உரிமையாளர்கள் 3 நாட்களுக்குள் அபராதத்தைச் செலுத்தி கால்நடைகளை திரும்பப் பெறவில்லையெனில் கால்நடை சந்தையில் விற்பனை செய்யப்பட்டு, அந்தத் தொகை கருவூலத்தில் உள்ள மாநகராட்சி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago