திருச்சி மாநகரில் தொடர் மழையால் - சேறு, சகதி, குண்டும் குழியுமான சாலைகள் : விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

திருச்சி மாநகரில் தொடர் மழையால் சேறும், சகதியுமாகவும், குண்டும், குழியுமாகவும் மாறிவிட்ட சாலைகளை விரைந்து சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாநகரில் கடந்த பல நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், மழைநீர் வடிய வழியின்றி சாலையிலேயே தேங்கியுள்ளது. இதனால் பெரும்பாலான தார் சாலைகள் குண்டும், குழியுமாக மாறி விட்டன. 10 வார்டுகளில் நடைபெறும் புதைசாக்கடைப் பணிகளுக்காக ஆள் இறங்கும் துளைகள் மற்றும் குழாய்கள் பதிக்க தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் சேறும், சகதியுமாக மக்கள் நடந்து செல்வதற்கு கூட லாயக்கற்ற நிலைக்கு மாறிவிட்டன. குறிப்பாக காட்டூர் அம்மன் நகர், சக்தி நகர், விண் நகர், பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதி, கே.கே.நகர் முல்லை நகர், அன்பில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் சேறும், சகதியுமாக காட்சியளிக்கின்றன. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ்.சம்சுதீன் கூறுகையில், ‘‘திருச்சி மாநகரில் பெரும்பாலான சாலைகள் மழையால் சேதமடைந்துள்ளன. நகரின் விரிவாக்கப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இன்னும் சாலையே அமைக்கப்படாததால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் சொல்லொணா இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, இதற்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்