தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டி.எஸ்.ஏ.சுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள், திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு:
இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்த மிகப்பெரிய தொழிலாக ஜவுளித்துறை உள்ளது. தமிழகத்தில் மட்டும் 6 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 44,000 கோடிக்கு உற்பத்தி நடைபெறுகிறது. அரசுக்கு ரூ. 2,200 கோடி ஜிஎஸ்டி கிடைக்கிறது. நாட்டின் துணி தேவையில் 60 சதவீதத்தை சாதாரண விசைத்தறிகள் பூர்த்தி செய்கின்றன.
கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை ஜவுளி உற்பத்திக்கு தேவையான நூல் விலை, 50 முதல் 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. பஞ்சின் விலை குறைவாக இருந்த போதிலும், பஞ்சு, நூல் ஆகியவற்றை ஏற்றுமதி செய்து செயற்கையான தட்டுப்பாட்டை உண்டாக்கி, அவ்வப்போது நூல் விலையை உயர்த்தி வருகின்றனர். ஏற்கெனவே, நூல் விலை நிர்ணயக் குழு அமைத்து, நூல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தோம். சிமென்ட் விலை உயரும்போது அரசு தலையிட்டு அதனை குறைக்கச் செய்கிறது. அதுபோல் வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற வற்றுக்கு விலை உயர்வோ, தட்டுப்பாடோ ஏற்படும்போது அரசு நடவடிக்கை எடுத்து விலை குறைக்கச் செய்கிறது.
தற்போது, தாறுமாறாக உயர்ந்து ள்ள நூல் விலை உயர்வால் ஜவுளித் தொழில் முடங்கிப்போகும் நிலையில் உள்ளது. எனவே, அரசு உடனடியாக தலையிட்டு நூல் உற்பத்தியாளர்கள், நூல் உபயோகிப்போர் சங்கங்கள், அரசு தரப்பு அதிகாரிகள் என முத்தரப்பு குழு அமைத்து, அதன்மூலம் நூல் விலையை நிர்ணயம் செய்து, நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago