‘வாட்ஸ் அப்’ காலத்திலும் - நாளிதழ் வாசிப்பு மிகவும் அவசியம் : மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா கருத்து

வாட்ஸ்அப் காலத்திலும் நாளிதழ் வாசிப்பு மிகவும் அவசியமானது என மாணவர்களிடம் கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.

‘இந்து தமிழ் திசை’ மற்றும் ரோட்டரி கோயமுத்தூர் மில்லினி யம், ஒய்ஸ் மென் கிளப் ஆஃப் கோயமுத்தூர் சார்பில் ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3201 (கோவை மண்டலம்), ஒய்ஸ் மென் இன்டர்நேஷனல் தென் மாவட்டம் செயல்பாட்டில், குமரகுருதொழில்நுட்பக் கல்லூரி ரோட்ட ராக்ட் கிளப், காஸ்மோபாலிடன் ரோட்டராக்ட் கிளப், வடவள்ளி ரோட்டராக்ட் கிளப் ஆதரவில், அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், முதற்கட்டமாக கோவையில் உள்ள 10 பள்ளிகளுக்கு 90 நாட்களுக்கு தலா 10 இந்து தமிழ் திசை நாளிதழ்களை இலவசமாக வழங்கும் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

கோவை ராஜவீதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா இத்திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசியதாவது:

வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாக செய்திகளைப் படிக்கும் காலமாக தற்போது மாறி விட்டது. சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை அப்படியே அனைவரும் நம்பும் நிலைக்கு வந்துவிட்டோம். இத்தகைய நிலையில் நாளிதழ்கள் வாசிப்பு என்பது மிகவும் அவசியமானது.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மாநகராட்சியில் உள்ள பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த நாளிதழ்களைக் கொடுப்பது மிகப்பெரும் விஷயம். நாளிதழ்களில் வரும் செய்திகள் பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன என்பதால் நாம் அவற்றை நம்பலாம். ஆனால் சமூக ஊடகங்களில் யார் வேண்டுமானாலும் எதையும் பதிவிடுகின்றனர்.

எனவே, நாளிதழ்களை மாணவர்கள் வாசிக்க வேண்டும். மாணவர்கள் நாளிதழ்களை வாசிக்கும்போது அவர்களது பொது அறிவு உள்ளிட்ட திறன்கள் மேம்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்வில் ஆணையருடன் நாளிதழ் வாசிப்பு குறித்து கலந்துரையாடிய மாணவிகள் இருவருக்கு புத் தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. அவர்களின் வீட்டு முகவரிக்கு 3 மாதங்களுக்கு இலவச நாளிதழ் விநியோகம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில், முதன்மைக் கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி அலுவலர் வள்ளியம்மாள், பள்ளித் தலைமை ஆசிரியர் மணியரசி, ‘இந்து தமிழ் திசை’ விற்பனை பிரிவு பொது மேலாளர் டி.ராஜ்குமார், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3201 பார்ட்னர்ஷிப் போரம் மண்டல தலைவர் ஹென்றி அமல்ராஜ், ரோட்டரி கிளப் ஆஃப் கோயமுத்தூர் மில்லினியம் முன்னாள் தலைவர் சாய்கிருஷ்ணா, ஒய்ஸ் மென் கிளப் கோயமுத்தூர் பகுதி சேவை இயக்குநர் செல்வராஜ், ஒய்ஸ் மென் கிளப் கோயமுத்தூர் அதிகாரி ராம்குமார், வடவள்ளி ரோட்டராக்ட் கோயமுத்தூர் தலைவர் சிவ கணேஷ், முன்னாள் தலைவர் ஆர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE