‘சுகாதார துறையின் எதிர்காலம்’ மெய்நிகர் கருத்தரங்கு : கோவையில் நாளை தொடக்கம்

இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சிஐஐ) சார்பில் சுகாதாரத் துறையின் எதிர்காலம் என்ற தலைப்பில்மெய்நிகர் கருத்தரங்கு கோவையில் நாளை தொடங்கி நடைபெறு கிறது.

இதுகுறித்து மாநாட்டுத் தலைவர் சுவாதி ரோஹித் மற்றும் சிஐஐ ஹெல்த்கேர் பிரிவின் கோவை தலைவர் ஜே.எஸ்.புவனேஸ்வரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சுகாதாரத் துறை படிப்படியாக சிறந்த தொழில்நுட்பங்களுக்கு மாறிக் கொண்டிருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் சுகாதாரத் துறையில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்கியுள்ளது. சுகாதாரம் சார்ந்த வணிகத்தின் தொடர் வளர்ச்சிக்கு டிஜிட்டல் தொழில் நுட்பம் முக்கிய பங்களிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே சுகாதாரம் சார்ந்த புதிய தொழில்முனைவோர் வளர்ந்து வருகின்றனர். குறிப்பாக இந்த நோய் தொற்று காலத்தில் இந்தத் தொழில் முனைவோர் கணிசமான முதலீடுகளை தங்களின் பல தரப்பட்ட சேவைகளுக்கு திரட்டியுள்ளனர். புதிய தொழில்முனைவோரிலிருந்து வளர்ந்து விட்ட தொழில்நுட்ப ஜாம்பவான்கள் வரை, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் வளர்ந்து வரும் மருத்துவத் தொழில் நுட்ப மாற்றங்களின் தேவையையும், நோயாளிகள் மற்றும் பயனாளிகளின் மதிப்புக்கூட்டு சேவைக்கான முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றனர்.

மேலும் இந்தப் புதிய சகாப்தத்தில் புதுமையான முதலீடுகளை நோக்கி சுகாதாரத் துறை நகரவேண்டி இருக்கின்றது. உள்நாட்டுமற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கான தேவை இருக்கின்றது. அதனடிப்படையில், இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) கோவை மண்டலம் சார்பில் நவம்பர்19, 20-ம் தேதிகளில் ‘சுகாதாரத் துறையின் எதிர்காலம்' என்ற தலைப்பில் மெய்நிகர் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

இந்த கருத்தரங்கில் சுமார் 30துறை சார்ந்த வல்லுனர்கள் கலந்துகொண்டு சுகாதார தகவல் தொழில்நுட்பம், டெலி - ஹெல்த், மெட் - டெக் மற்றும் டிஜிட்டல் தெரபியூட்டிக்ஸ் பற்றிய தலைப்புகளில் விரிவாக பேசவுள்ளனர். கருத்தரங்கில் பங்கேற்க https://forms.office.com/r/KCdRW87g17 என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE