நூல் விலை உயர்வைக் கண்டித்து ஈரோட்டில் 4 ஆயிரம் ஜவுளி கடைகள், கிடங்குகள் அடைப்பு :

By செய்திப்பிரிவு

ஈரோடு: நூல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகள் இரு நாள் கடையடைப்பு போராட்டத்தை தொடங்கினர்.

இதனால், ஈரோடு திருவெங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, காமராஜ் நகர், என்.எம்.எஸ்.காம்பவுண்ட், ராமசாமி கவுண்டர் வீதி, சொக்கநாதர் கவுண்டர் வீதி, அகில் மேடு வீதி இந்திராநகர் உட்பட பகுதிகளில் 4 ஆயிரம் ஜவுளி கடைகள் மற்றும் கிடங்குகள் நேற்று அடைக்கப்பட்டன.

கடை அடைப்பு குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 40-ம் நம்பர் நூல் ஒரு கிலோவுக்கு ரூ.80 வரை உயர்ந்துள்ளது. 30-ம் நம்பர் நூல் ரூ.90-ம், 20-ம் நம்பர் நூல் ரூ.50, வெப்ட் 40-ம் நம்பர் ஒரு பாக்கெட் ரூ.11 ஆயிரத்தில் இருந்து ரூ.14, 200 வரையிலும் உயர்ந்துள்ளது.

ஏற்கெனவே ஒப்புக்கொண்ட ஜவுளி உற்பத்தியைக் கூட முடிக்க முடியாமல், நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். நூல் விலையை இரண்டு மாதம் அல்லது மாதம் ஒரு முறை மட்டுமே உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இரண்டு நாள் கடையடைப்பு போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம். இப்போராட்டத்துக்கு 18 சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இரு நாள் கடையடைப்பு காரணமாக ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர். ஜவுளி வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு கனி மார்க்கெட் வியாபாரிகளும் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் (18-ம் தேதி) கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE