பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் - பத்திரப்பதிவு செய்யப்பட்ட நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் : சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உறுதி

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த ரமேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சதுப்பு நில இயக்கம் திட்டத்தை அறிவித்தார். இதையடுத்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆய்வு செய்யப்பட்டது.

சதுப்பு நில பகுதிக்கு அருகில் உள்ள குப்பை கிடங்கை அகற்றி, அதை சீரமைக்கும் பணி முதற்கட்டமாக மேற்கொள்ளப்படும். 7,000 ஹெக்டேர் நிலம் உள்ள பள்ளிக்கரணை தற்போது 640 ஹெக்டேராக உள்ளது. இங்குள்ள குப்பை கிடங்கு அகற்றப்பட்டு வனமாக மாற்ற திட்டம் மேற்கொண்டு வருகிறோம். வரலாற்றுச் சிறப்பு மிக்க பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஒட்டுமொத்தமாக மீட்டெடுக்க வேண்டும்.

இந்த சதுப்பு நிலத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து 50 ஆயிரம் பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. இந்த சதுப்பு நிலத்தின் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த10 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பராமரிப்பு பணி சரியாக மேற்கொள்ளப்படவில்லை. சில இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகவும், மண் வெட்டி எடுக்கப்பட்டதாகவும், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. சதுப்பு நிலத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பத்திரப் பதிவு செய்யப்பட்ட நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE