கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் - ஆட்டோக்களுக்கு தமிழக அரசின் உரிமம் அவசியம் : அதிகாரிகள் உறுதி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு தமிழக போக்குவரத்துத் துறையின் உரிமம் பெற்றிருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருபாநந்தன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், "கடலூரில் இருந்து புதுச்சேரி கிருமாம்பாக்கம் வரை எந்தவொரு உரிமமும் இல்லாமல் 150 ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆட்டோக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி போக்குவரத்துத் துறைச் செயலர்களுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘கடலூரில் இருந்து மிக அருகில் கிருமாம்பாக்கம் உள்ளது என்றும், எனவே புதுச்சேரி அல்லது தமிழக அரசின் உரிமம் பெற்றால் போதுமானது என்றும், இந்த ஆட்டோக்கள் தமிழக அரசின் போக்குவரத்துத் துறையிடம் உரிய உரிமம் பெற்று இயக்கப்படுவதால், அதில் ஒன்றும் விதிமீறல் இல்லை என்றும் புதுச்சேரி அரசு கூறியுள்ளது.

ஆனால் புதுச்சேரி அரசிடம் இருந்து இதற்காக தனியாக அனுமதி பெறத் தேவையில்லை என்றாலும், அந்த ஆட்டோக்கள் தமிழக அரசிடமிருந்து உரிய அனுமதியைப் பெற்றுள்ளதா என்பதை இரு மாநில போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் சரி பார்க்க வேண்டும். உரிய உரிமம் இல்லை என்றால், அந்த ஆட்டோக்களை இயக்க தடை விதிக்க வேண்டும்.

விதிகளை மீறும் ஆட்டோக்கள் குறித்து மனுதாரர் புகார் அளித்தால், அதன் மீது சட்டப்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்