திமுகவுடன் நட்பும் இல்லை; எதிர்ப்பும் இல்லை - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி : ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி தகவல்

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கோயில்கள் மற்றும் தேவாலயங்களின் திருப்பணிகளுக்காகவும்; உயிரிழந்த ராணுவ வீரர் தேவானந்த் குடும்பத்துக்கு உதவியாகவும் ரூ.66 லட்சம் நிதியை திருச்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி வழங்கினார்.

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் முன்பு திராவிடக் கட்சிகள் கடவுள் மறுப்பை முன்வைத்து பிரச்சாரம் செய்தன. தற்போது வாக்கு அரசியல் காரணமாக திராவிடக் கட்சிகள் கடவுள் மறுப்பைகைவிட்டு, கடளை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டன. ஆர்எஸ்எஸ், பாஜக போல திராவிடக் கட்சியினரும் கடவுள் ஆதரவு கருத்துகளை மக்களிடத்தில் பேசத் தொடங்கிவிட்டனர்.

தமிழகத்தில் பேரிடர், வெள்ள காலங்களில் அதிமுக, திமுக என இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டுவது வழக்கமாகிவிட்டது. நேர்மையானவர்கள் அரசியலில் தாக்குப்பிடிப்பது சிரமம். ஒரு கட்சி, ஒரு குடும்பம் மட்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வருவது ஜனநாயகம் கிடையாது. அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். ஒழுக்கம் உள்ளவர்கள், தூய்மையானவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அதற்கு தமிழக மக்களிடத்திலும் மிகப்பெரிய மாற்றம் வர வேண்டும்.

கடந்த மக்களவைத் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி திமுக கூட்டணியில் இருந்தது. ஆனால் தற்போது திமுகவுடன் நட்பும் இல்லை, எதிர்ப்பும் இல்லை. வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்