திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் நந்தியாற்றில் நீர் வரத்து பெருகியுள்ளதையும், சங்கேந்தி பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ள வயல்களையும் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உப்பாறு வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால், பெருவளை வாய்க்கால், பங்குனி வாய்க்கால், அய்யன் வாய்க்கால், கண்டிராதீர்த்தம் ஏரி, விரகாலூர் ஏரி, சங்கேந்தி ஏரி ஆகியவற்றின் வடிகாலாக லால்குடி வட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்தில் செல்லும் நந்தியாறு உள்ளது. இந்த ஆறு முடிவில் கொள்ளிடத்தில் சென்று கலக்கிறது.
இந்தநிலையில், வட கிழக்கு பருவமழை காரணமாக நந்தியாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் சங்கேந்தி பகுதியில் விளை நிலங்கள் மற்றும் இதர பகுதிகளைச் சூழ்ந்துள்ளதை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு நேற்று டிராக்டரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, பல்வேறு வாய்க்கால்கள், ஏரிகள் மற்றும் வயல்வெளி பகுதிகளிலிருந்து வெளியேறும் நீரும் செல்லும் வகையில் வடிகாலாக உள்ள நந்தியாற்றை முழுமையாக அகலப்படுத்தி, தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கவும், பயிர்ச் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தவும் அரசுத் துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் சு.சிவராசு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, எம்எல்ஏ அ.சவுந்தரபாண்டியன், கோட்டாட்சியர் ச.வைத்தியநாதன், நீர்வள ஆதாரத் துறை செயற்பொறியாளர்கள் மணிமோகன், சரவணன், உதவிச் செயற்பொறியாளர்கள் ஜெயராமன், தயாளகுமார் மற்றும் வருவாய், வேளாண்மை, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago