பெரம்பலூர் மாவட்டத்தில் - 2 நீர்த்தேக்கங்கள், 40 ஏரிகள் நிரம்பின : கல்லாறு, மருதையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழையால் 2 நீர்த்தேக்கங்கள், 40 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பிவிட்டன. மேலும், 6 ஏரிகள் நிரம்பும்தருவாயில் உள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்ட விசுவக்குடி நீர்த்தேக்கம், ஆலத்தூர் வட்டத்தில் உள்ள கொட்டரையில் மருதையாற்றின் குறுக்கே கட்டப்படுள்ள கொட்டரை நீர்த்தேக்கம் ஆகியவை முழு கொள்ளளவை எட்டி, உபரிநீர் முறையே கல்லாறு, மருதையாறுகளில் திறந்துவிடப்படுகிறது. இதனால், இந்த ஆறுகளின் கரையோரம் உள்ள பொதுமக்கள் ஆறுகளை கடக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில் அரும்பாவூர் பெரிய ஏரி, கீழப்பெரம்பலூர் ஏரி, வடக்கலூர் ஏரி, வெண்பாவூர் ஏரி, நூத்தப்பூர் ஏரி உட்பட 40 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. பெண்ணகோணம், ஆய்க்குடி, கை.களத்தூர், கிளியூர் ஏரிகள் உட்பட 6 ஏரிகள் 90 சதவீதம் நிரம்பி, முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளன. அதேநேரத்தில், செங்குணம், து.களத்தூர் ஏரி உட்பட 4 ஏரிகள் 25 சதவீதத்துக்கும் குறைவாகவே நிரம்பி உள்ளன.

நிகழாண்டு, பெரும்பாலான நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணிவரை பதிவான மழையளவு(மில்லி மீட்டரில்): செட்டிக்குளம் 64, வேப்பந்தட்டை 42, கிருஷ்ணாபுரம் 32, பாடாலூர் 24, தழுதாளை 14, பெரம்பலூர் 12.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்