ஏர்வாடி மலைப்பகுதியில் 11 ஆயிரம் விதைப்பந்துகள் வீச்சு :

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி மலைப்பகுதியில் விதை பந்துகள் வீசும் பணியை மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி காந்திநகர் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்கள் மூலம், மரவிதை பந்துகள் வீசும் பணி நடைபெற்றது. இப்பணியை தொடங்கி வைத்த ஆட்சியர் கூறும்போது, திருநெல்வேலி மாவட்டத்தில் ‘நெல்லை நீர்வளம்” அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் தன்னார்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நீர்வளத்தை மேம்படுத்துதல், பசுமையை உருவாக்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில், ஏர்வாடி மலைப் பகுதியில் பள்ளி மாணவ மாணவியர்கள் மூலம் 11 ஆயிரம் விதைப்பந்துகள், 44 ஆயிரம் மரவிதைகளுடன் வீசப்படுகிறது. உள்ளூர் ரகங்களை சேர்ந்த மரவிதைகள் இங்கு வீசப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு மரக்கன்றுகள் நடும் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைத்து பள்ளி, கல்லூரி வளாகங்களிலும் மரக்கன்றுகளை பராமரிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

முன்னதாக நாங்குநேரியில் உள்ள பெரியகுளத்தின் கரைகளின் உறுதித்தன்மை குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்றும், ஏர்வாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு தரமான உணவு தயார் செய்யப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.

வனத்துறை அலுவலர் முருகன், நாங்குநேரி வட்டாட்சியர் இசக்கிபாண்டி, ஏர்வாடி பேரூராட்சி செயல் அலுவலர் ஞானசுந்தரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்