நெல்லை, தென்காசியில் இடி, மின்னலுடன் கன மழை :

திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலையில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

திருநெல்வேலி மாநகரப் பகுதி களில் நேற்று பிற்பகல் வரையில் மழை ஓய்ந்திருந்த நிலையில் மாலை 4 மணியளவில் மிதமான மழை பெய்தது. அரைமணிநேரம் இந்த மழை நீடித்தது. இதை தொடர்ந்து மாலை 5 மணியளவில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழை இரவிலும் நீடித்தது. திடீரென்று பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டது. வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

நகர் முழுக்க இருள் சூழ்ந்த தால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சாலை களில் ஊர்ந்து சென்றன. பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகள் முடிந்து மாணவ, மாணவியர் பேருந்து நிலையங்களுக்கு வந்து கொண்டிருந்த நிலையில், திடீர் கனமழையால் நிலைகுலைந்தனர். பாளையங்கோட்டையில் பேருந்து நிலையம் திறக்கப்படாத நிலையில் வெளியே சாலையோரங்களில் மழைக்கு ஒதுங்க இடமில்லாமல் மாணவ, மாணவியர் தவித்தனர்.

திருநெல்வேலியில் தற்காலிக மாக இயங்கிவரும் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது. பயணிகளால் உள்ளே சென்று பேருந்துகளில் ஏற முடியவில்லை. மழையில் ஒதுங்க இடமில்லாமலும், பேருந்து நிலையத்துக்குள் செல்ல முடியாமலும் பயணிகள் பெரிதும் தவித்தனர்.

வெள்ளத்தில் மூழ்கி இளைஞர் மரணம்

தாழையூத்து பகுதியில் தாமிரபரணி ஆற்றில் ஆண் ஒருவரது சடலம் கரை ஒதுங்கியது. தாழையூத்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டவர் நாரணம்மாள்புரத்தை சேர்ந்த உடையார் (26) என்பதும், நேற்றுமுன்தினம் ஆற்றில் குளிக்க சென்றபோது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

பாளையங்கோட்டையில் நேற்று பெய்த கனமழையால் மனகாவலம்பிள்ளைநகர், செந்தில்நகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த வீடுகளில் தத்தளித்தவர்களை பாளையங்கோட்டை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழையின் தீவிரம் குறைந்திருந்தது. நேற்று முன்தினம் ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் சிவகிரியில் மட்டும் 18.2 மி.மீ. மழை பதிவானது. நேற்று காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

அவ்வப்போது லேசான மேகமூட்டம் காணப்பட்டது. இந்நிலையில், மாலையில் திடீரென மேகம் திரண்டு மழை பெய்தது. பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தென்காசி, சுரண்டை பகுதிகளிலும் மழை பெய்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE