சேலம்: சேலத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மாநில அளவிலான கலைத்திருவிழாபோட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டி வரும் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது
மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்கும் வகையில், தேசிய கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. குறிப்பாக, இசை, நடனம், காண்கலை உள்ளிட்ட தலைப்புகளில் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன.
மாநில அளவிலான போட்டி சேலம் சோனா கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது. மாவட்ட கல்வி அலுவலர் (சேலம்) உதயகுமார் வரவேற்றார். ஒருங்கிணைந்த கல்வி ஆலோசகர் அய்யாராஜூ கலைத்திருவிழா குறித்து விளக்கினார்.
விழாவுக்கு, சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் தலைமை வகித்தார். சோனா கல்லூரி முதல்வர் செந்தில்குமார், சோனா கலை, அறிவியல் கல்லூரி முனைவர் காதர் நவாஸ், தியாகராஜா பல்தொழில்நுட்பக் கழக முனைவர் கார்த்திகேயன் ஆகியோர் பேசினர். மாவட்டக் கல்வி அலுவலர் (சங்ககிரி) பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.
முதல் நாளான நேற்று, வாய்ப்பாட்டு இசை போட்டியில் மாணவ, மாணவிகள் 148 பேர் பங்கேற்றனர். இன்று (17-ம் தேதி) கருவி இசைப் போட்டிகளும், நாளை (18-ம் தேதி) பாரம்பரிய நடனப் போட்டிகளும் நடக்கவுள்ளன.
இதில், மாவட்ட அளவில் முதலிடத்தில் தேர்வு பெற்ற சுமார் 656 மாணவ, மாணவிகள், பாதுகாப்பு ஆசிரியர்கள் 222 என மொத்தம் 888 பேர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago